நினைவுகள்-11


உயில் எழுதவேண்டாம்.

சொத்து இருப்பவர்தான் உயில் எழுதமுடியும்.

சொத்து இல்லாதவர்களுக்கு அதைப் பற்றிய கவலையே தேவையில்லை.

சொத்து இல்லாதவர்கள், “இந்த பிறவியில் அந்தக் கொடுப்பினை இல்லாமலேயே, வாழ்ந்து மறைய வேண்டியதுதான்” என்ற மனவருத்தம் இருந்தாலும், உயில் எழுதிவைக்க வேண்டுமே என்ற கவலை இருக்காது. (ஒன்று இருந்தால், இன்னொன்று இருக்காது என்பது பிரபஞ்ச விதி!)

சொத்து இருப்பவர், அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் உயில் எழுதி வைப்பது, அவரின் வாரிசுகளுக்குள் சண்டையில்லாமல் இருக்க வழிவகுக்கும் என சட்டமும், அதைப்படித்த வக்கீல்களும், அனுபவமிக்க பெரியவர்களும் சொல்லி வருகிறார்கள்.

ஆனால், எனக்கென்னவோ, அது சரி என்றுபடவில்லை. கட்டாயமாக உயில் எழுதிவைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் குடும்ப சூழ்நிலை, தேவை, இவைகளைப் பொறுத்து உயில் அவசியமா இல்லையா என்பதை அவரவரே முடிவு செய்ய வேண்டும்.

 1. சொத்து இருக்கிறது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
 1. தனக்கு வயதாகிவிட்டது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
 2. நாம் உயிருடன் இருக்கும்போதே, நம் சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தால், நம் பிள்ளைகள் மகிழ்வார்கள் அல்லது சண்டையிருக்காது என்பதற்காக மட்டுமே உயில் எழுதவைக்க வேண்டாம்.
 3. பிள்ளைகள், நம்மைக் கட்டாயப் படுத்துகிறார்கள் என்பதற்காக மட்டும் உயில் எழுத வேண்டாம்.
 4. நமது ஒத்த வயதுடைய நண்பர்கள் அதுபோல உயில் எழுதி வைத்துள்ளார்கள் என்பதற்காகவோ, அவரைப்போலவே நாமும் எழுதி வைத்து விடுவோம் என்பதற்காகவோ மட்டும் உயில் எழுத வேண்டாம்.
 5. நாம் இந்த உலகைவிட்டு சென்றபின், நமது பிள்ளைகள், ‘உயிருடன் இருக்கும்போதே, இந்தப்பாவி சொத்தை பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம்’ என்று நம்மை திட்டிவிடுவார்கள் என்பதற்காக பயந்து கொண்டு உயில் எழுதி வைக்க வேண்டும்.
 6. ஒரு மகனோ/ மகளோ நம்மை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வாஞ்சையால் உயில் எழுதி வைக்க வேண்டாம்.
 7. ஒரு மகனோ/ மகளோ நமது கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதற்காக அவனுக்கு/அவளுக்கு மட்டும் சொத்து போய் சேரவே கூடாது என்பதற்காக மட்டும் ஒரு உயிலை எழுதி வைக்க வேண்டாம்.
 8. கோபப்பட்டுக் கொண்டு கோயிலுக்கும், தர்மத்துக்கும் எழுதி வைக்க வேண்டாம். (தர்மத்துக்கு எழுதிய சொத்துக்கள் எல்லாம், கோர்ட்டில் வழக்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.)

இதில் சொல்லியுள்ள எந்த காரணமும் உயில் எழுதுவதற்கு போதுமான காரணமாக கொள்ள முடியாது.

முடிந்தவரை நம் வாழ்நாள்வரை நாமே நமது சொத்தையும் பணத்தையும் 100 சதம் அனுபவித்து இறப்பதே சாலச் சிறந்த முடிவு. நமது வாழ்நாளுக்குப் பின்னர் நமது பிள்ளைகளுக்குத்தான் அந்த சொத்து போய்ச் சேரப் போகிறது. இதில் எந்த சட்டப் பிரச்சனையும் வராது. வேறு மூன்றாம் மனிதர்களுக்கு எந்தக்காலத்திலும் அவை போய் சேராது. எல்லா மதங்களிலும் இதற்கென தெளிவான தனித்தனி சட்டங்கள் உள்ளன. எனவே உயில் எழுதும் எண்ணத்தை உங்களின் வாழ்நாள் வரை ஒத்தி போடுங்கள்.

ஆனால், கீழ்கண்ட சூழ்நிலை இருந்தால் மட்டும் உயில் எழுதி வைக்க நீங்கள் முயற்சி எடுங்கள்.

 1. உங்களிடம் ஒரேயொரு சொத்து மட்டும் இருந்து, உங்கள் மனைவிக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தால், அந்த சொத்தை, உங்களின் காலத்துக்குப் பின், அந்த சொத்து முழுவதையும் உங்களின் மனைவிக்கே கொடுத்து விடுவதாய் உயில் எழுதி வைத்து விடுங்கள். (உங்களின் பிள்ளைகளிடமோ, மருமகளிடமோ கையேந்த வைக்காதீர்கள்.)
 2. உங்களிடம் பல சொத்துக்கள் இருந்து, உங்களுக்கும் நல்ல வசதி இருந்தால், ஆதரவற்ற உங்களின் உறவினர்கள் உங்களை எதிர்பார்த்து இருந்தால், (மகன், மகள் தவிர, அதாவது, உங்களின் இறந்த மகனின் மனைவி,  உங்களின் இறந்த சகோதரன்/ சகோதரி வாரிசுகள், உங்களின் மனைவியின் இறந்த சகோதர/சகோதரி வாரிசுகள் போன்றோர் இருந்தால்) உங்களிடம் அதிகப்படியாக உள்ள சொத்துக்களை அவர்களுக்கு பிரித்து உயில் எழுதி வைத்து விடுங்கள்.

நாம் இறந்தபின்னும், இந்த உலகம் எந்த சிக்கலும் இன்றி இயங்கத்தான் போகிறது. எல்லாச் சட்டங்களும் இருக்கத்தான் போகிறது. நாமே எல்லாவற்றையும் சரிசெய்து வைத்துவிட்டுப் போய்விடுவோம் என்றும், இல்லையென்றால் மற்றவர்களுக்கு அது சிக்கலை உண்டாக்கிவிடும் என்றும் எண்ணிக் கொண்டு எதையும் செய்ய வேண்டாம். நமது மறைவுக்குப் பின்னர், அவைகளை நிறைவேற்ற இறைவன் இருக்கிறான் என்பதை மறந்துவிட வேண்டாம். ஏனென்றால், உயிருடன் இருக்கும்போது எழுதி உயில்கள், செட்டில்மெண்ட் பத்திரங்கள் அதில் சொல்லியுள்ள நிபந்தனைகள் எல்லாம், அவர் மறைந்தபின்னர், அவசியமே இல்லாமல் போன பல நிகழ்வுகள் உண்டு; அதற்கு நேர்மாறாக நடந்த நிகழ்வுகள் பல உண்டு. “நாம் ஒன்று நினைத்தால், தெய்வம் வேறொன்றை நடத்தத்தான் செய்வார், சந்தேகமில்லை.”

தன் வாழ்நாளிலேயே செட்டில்மெண்ட் பத்திரங்கள் மூலம் தனது வாரிசுகளுக்கு சொத்தை பங்கிட்டு கொடுத்துவிட்டு, அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் கண்ணீர் விட்டு அழுத சம்பவங்கள், அவைகளை எழுதிய வக்கீல் என்ற முறையில் ஏராளம்! ஏராளம்!! காரண-காரியங்கள் தேவையில்லை. பந்த-பாசங்கள் பொய் எனவும் சந்தேகிக்கும் சூழ்நிலைகள். ஏமாந்துவிட்டோம் என்ற ஏக்கங்கள். போக்கிடம் இல்லாத தனிமைத்துயரம்! வயதான காலத்தில் ஒருவர் தனக்கென சொத்தோ, பணமோ இல்லாமல் இருந்துவிடக் கூடாது. ஆனால், வறுமையில் இருந்தால், “ஏமாந்து, தனக்கு உதவிசெய்து காப்பாற்றும் பிள்ளையொன்று தனக்கு இருந்தால்”, அவர் உண்மையில் அதிர்ஷ்டசாலியே!

நமது மறைவுக்குப் பின், இந்த உலகில் நமது பிள்ளைகள், ‘நாம் சொல்லிச் சென்ற வார்த்தைகளை’ எத்தனைபேர் மதித்துள்ளார்கள். மிகக் குறைவே. நமக்கு முகத்துக்குநேர், மரியாதை செய்யும் நம் பிள்ளைகள்கூட, நமது கண்ணுக்குப் பின், அலட்சியமாகத்தான் நடந்துகொள்கின்றன. நாம் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை பொய்யாகத்தான் போகிறது.

2000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த கிழவி சொன்னதுபோல, “இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாய் வேண்டாள்…….”

பணம் இல்லாவிட்டால் பெண்டாட்டி மதிக்கமாட்டாள் அது இயற்கை; ஆனால் பெற்றதாயும்கூடவா! ஆச்சரியமே!!!

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s