நினைவுகள்-1


கடவுள்: இவரே பிரபஞ்சத்தைப் படைத்தவர். அதற்கும் மேலாக மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுபவரும் இவரே. இவர் எப்படி இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான கருத்தில் சொல்லியுள்ளன. சில மதங்கள், மனிதனைப் போலவே கடவுளைப் படைத்துள்ளன. சில மதங்கள் அவருக்கு உருவமே கொடுக்கவில்லை. உண்மையில் கடவுள் உருவத்தில் இருப்பாரா? பிரபஞ்சத்தை படைத்தவரே தனக்கும் ஒரு உருவத்தைப் படைத்திருப்பாரா? எதற்காக அவருக்கு ஒரு உருவம் வேண்டும்? மனிதனை அவ்வப்போது வந்து பார்ப்பதற்கா? கடவுள், தேவைப்படும்போது, மனித-அவதாரங்களாக வந்ததாகச் சில மதங்களின் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
‘ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இவரே’ என்றும் கருதப்படுகிறது. எல்லாப் பொருள்களிலும் இவர் இருந்து இயங்குவதாகவும் அல்லது இயக்குவதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கருத்துப்படி பார்த்தால், அவருக்குக்கென்று தனியான உருவம் தேவையில்லை. ஆனாலும், மனிதன், ‘இல்லாத ஒன்றை, இருப்பதாக’ கற்பனை செய்யத் தயங்குகிறான். எங்கும் நிறைந்து தனிஉருவம் இல்லா நிலையை, மனிதமனம் ஏற்க சிரமப்படுகிறது. இறைநிலைதான் இறைவன் என்றால், எப்பொருளிலும் அவர் இருப்பு உள்ளது என்றே கருதவேண்டும். எல்லாப் பொருளின் இயக்கமும் அவர் இயக்கமே! உயிரற்ற பொருளில் அவர் இயக்கம் எப்படி இருக்கிறது என்று மனிதனால் உணர முடியவில்லை. ஆனாலும் அதிலும் அவரின் அணுசக்தி இயக்கநிலையில் உள்ளது என்றே விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அப்படியென்றால், உயிருள்ள பொருள்களில் அவரின் இயக்கசக்தியை தாண்டி ஒரு அறிவு சக்தி இருக்குமா? அதுவே நகர்தலையும், மனதையும், சிந்தித்தலையும், இயக்குகிறதா? உயிருள்ள பொருள்களில்தான் ‘ஆன்மா’ என்னும் ‘அறிவு சக்தி’ இருக்கிறதா? உயிரற்ற பொருள்களில் அது இல்லையா? உயிரற்ற பொருள்கள் அனைத்தும், உயிருள்ள பொருள்களுக்கு உதவிக்காக இறைவன் படைத்தாரா?
இறைநிலையே எல்லாமாக இருக்கும்போது உயிரினங்கள் எதற்கு? அந்த உயிரினங்களில் ‘ஆன்மா’ என்னும் ‘அறிவுசக்தி’ எதற்கு? மற்ற உயிரற்ற பொருள்கள் எதற்கு?

மனித வர்க்கத்தையே முன்னிறுத்தித்தான் இந்த பிரபஞ்சம் முழுவதும் படைக்கப்பட்டதா? இறைவனின், பிரபஞ்ச படைப்பின் நோக்கம் என்ன? மனிதன் என்ற ஒரு அற்ப உயிருடன் இறைவனுக்கு அப்படி என்ன அதீதித உறவு? மனிதனின் உச்சபட்ச நிலைதான் இறைவனா?

இந்துமதத்திலுள்ள, ‘துவைத, அத்வைத, விசிஷ்டாத்வைத’ கொள்கைகளின்படி இறைவன் என்னும் பரமாத்மாவும், மனிதன் என்னும் ஜீவனில் உள்ள ஜீவாத்மாவும் ஒன்றே என்றும், அல்லது இரண்டும் வேறுபட்ட இருநிலை என்றும், அல்லது ஜீவனின் முதிர்ந்த முக்திநிலையே பரமாத்மாவின் ஐக்கியம் என்றும் சொல்லும் தத்துவ கோட்பாடுகள் பொருந்துகிறதோ?

பரமாத்மாவுடன் சேரும்காலம்வரை, ஜீவாத்மா மறுபிறப்புகளில் சஞ்சரிக்கும்போது இறைவனை விட்டு இடைபட்ட நிலையில் அவைகள் இயங்குகின்றனவா? அவ்வாறு பிறந்து, இறந்து பிறவிகள் எடுத்தால், அந்த இடைநிலையை நிர்வகிக்கும் இறைவன் யார்? அல்லது இறைவனின் துணைஅதிகாரி யார்? பிரபஞ்சத்தில் இடைப்பட்ட உலகங்களும் உள்ளனவா?

உயிருள்ள மனிதனின் மனதில் எண்ணவோட்டம் இருக்கிறது. அதைக்கொண்டே அவன் சிந்தனையும் செயலும் இருக்கிறது. அதை ‘மனிதஅறிவு’ என்கிறோம். அதேபோல பரமாத்மாவிடமும் மிகப்பெரிய அறிவு என்னும் எண்ணவோட்டம் இருக்கவேண்டும். இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுக்கும் ஏதேனும் தொடர்பும் இருக்கவேண்டும். மனிதனின் எண்ண ஓட்டமானது, பிரபஞ்ச இறைநிலையான பரமாத்மாவிடம் உள்ள மிகப்பெரிய அறிவு என்னும் எண்ண ஓட்டத்துடன் கலக்கலாம், கலந்துரையாடலாம், பகிர்ந்தும் கொள்ளலாம். அவ்வாறெனில், மனித அறிவின் எண்ண ஓட்டத்தின் தன்மையைக் கொண்டே, பிரபஞ்ச பரமாத்வாவின் பதில் எண்ண ஓட்டமும் இருக்க வேண்டும்; அப்போதுதான், எண்ணத்துக்கு ஏற்ப பலனும், செயலுக்கு ஏற்ப எண்ணமும் இருக்கும்.

இவ்வாறு மனிதனின் எண்ண ஓட்டம் அவனவனின் ஆன்மஅறிவுக்கேற்ப இருக்கும் என்ற கருதினால், இதில் இறைவனின் பொறுப்பு என்று ஏதும் இல்லை என்றே கருதவேண்டும். மனிதன், தன் ஆன்ம அறிவை, பிரபஞ்ச இறை நிலை அறிவுடன் இணக்கமாக வைத்துக்கொண்டும், அதன் சக்தியை பெற்றுக் கொண்டும் இயங்குபவர்களுக்கு ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பது சரியாகவே இருக்கும்.
ஆனாலும், மனிதனின் முன் ஜென்ம கர்ம நிலையானது, அவனின் ஆன்மா மட்டுமே அறிந்த ஒன்று; அதனால்தான் மனிதனின் உடலான மனதுக்கு தெரியாமல், ஆன்மா மட்டும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொண்டு அதன் பலன்களை பெற்றுக் கொள்ளும் என கருத வேண்டியுள்ளது. இப்பிறவியில் மனிதன் தனக்கு அல்லது தன் அறிவுக்கு தெரியாமலேயே பல கஷ்டங்களை அனுபவிக்க இந்த மனித ஆன்மா காரணமாக இருக்கவேண்டும்!

எல்லா இயக்கங்களுமே ஒரே இறைசக்தியின் இயக்கமா? ஒரே இறைசக்தியில் தோன்றி இருந்தாலும், அவை பல இறைசக்திகளாக வெளிப்பட்டு, இந்த மனித அறிவுசக்தி அல்லது ஆன்ம சக்தியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றே கருத வேண்டும். எனவே ஒன்றிலிருந்து பல இறைசக்தி தோன்றி இயக்கம் பெற்றிருந்தால், ஒரே இறைவன் என்ற நிலைமாறி, பன்மையில் இறைநிலையையும் உணர வாய்பிருக்கிறது.

இவை எல்லாம் ஒரு எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடே! மனிதனாகிய நாம், நமது அறிவு-சக்தி அல்லது ஆன்ம-சக்தி என்னும் அறிவை இறை-சக்தியுடன் சேர்க்கும் கலையை அல்லது முறையை நாமே தெரிந்து அந்த இறைநிலையில் தொடர்பு கொண்டு ஆன்மாவின் அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை அது அடுத்தடுத்த பிறவிகளை தடுக்கலாம்; அல்லது பரமாத்மா என்ற இறைநிலையுடன் ஐக்கியமாக உதவலாம். ஏன் ஐக்கியமாகவேண்டும் என்று தெரியவில்லை. ஒருவேளை அது அவ்வாறு இல்லையென்றால், அடுத்தடுத்த பிறவிகளை சிரமம் இல்லாமல் அனுபவிக்கவாவது உதவும் என்றே கருதுகிறேன்.
உங்களின் ஆன்ம அறிவுக்கேற்ப சிந்தித்துக் கொள்ளவும்.
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s